இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்". என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.(ஆதாரம்: புகாரி 2457)

வருக ! வருக !! مرحبًا بكم أهلاً وّسهلاً


மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப் பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர் 1. ஆரோக்கியம். 2. ஓய்வு. (ஸஹீஹுல் புகாரி 6412)

புதன், ஆகஸ்ட் 13, 2008

*மரணத் தருவாயில்...

பெருமானார் (ஸல்).................
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கிறார்கள்: திங்கட்கிழமையன்று முஸ்லிம்கள் அபூபக்ர் (ரழி) அவர்களைப் பின்தொடர்ந்து ஃபஜ்ர் தொழுது கொண்டிருக்கும் போது திடீரென ஆயிஷாவுடைய அறையின் திரையை நபி (ஸல்) அவர்கள் நீக்கி மக்கள் அணி அணியாக தொழுகையில் நிற்பதைப் பார்த்து ஆனந்தமாகச் சிரித்தார்கள். தொழ வைப்பதற்கு நபி (ஸல்) வருகிறார்கள் என்று எண்ணி அபூபக்ர் (ரழி) அவர்கள், தொழ வைக்கும் இடத்திலிருந்து சற்று பின்னே வரிசையை நோக்கி நகர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வருகையைப் பார்த்த மகிழ்ச்சியினால் முஸ்லிம்கள் தொழுகையில் நிலை குலைய ஆரம்பித்தனர். நபி (ஸல்) அவர்கள் 'உங்களது தொழுகையை முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டு அறையில் நுழைந்து திரையிட்டுக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இந்நிகழ்ச்சிக்குப் பின் இன்னொரு தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்களுக்குக் கிட்டவில்லை. முற்பகல் நேரம் வந்தவுடன் நபி (ஸல்) ஃபாத்திமாவை வரவழைத்து அவரிடம் சிலவற்றை இரகசியமாகப் பேசினார்கள். அதைக் கேட்டவுடன் ஃபாத்திமா (ரழி) அழலானார்கள். மீண்டும் அழைத்து சிலவற்றை இரகசியமாகக் கூறவே ஃபாத்திமா (ரழி) சிரித்தார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:இந்நிகழ்ச்சி பற்றி பின்பு ஒரு நாள் ஃபாத்திமாவிடம் விசாரித்தோம். எனக்கு ஏற்பட்ட இதே வலியினாலே நான் இறந்து விடுவேன் என நபி (ஸல்) கூறியபோது நான் அழுதேன். அவர்களது குடும்பத்தால் நான்தான் முதலில் அவர்களை சென்றடைவேன் என்று நபி (ஸல்) கூறியபோது நான் சித்தேன்'' என்று ஃபாத்திமா (ரழி) பதில் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)மேலும், ''அகில உலக பெண்களின் தலைவி ஃபாத்திமா'' என்று நபி (ஸல்) நற்செய்தி கூறினார்கள். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான நிலைமையைக் கண்ட ஃபாத்திமா (ரழி) ''எனது தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே!'' என்று வேதனைப்பட்டார்கள். உன் தந்தைக்கு இன்றைக்குப் பிறகு என்றுமே சிரமம் இருக்காது என்று நபி (ஸல்) ஆறுதல் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ஹசன், ஹுசைனை வரவழைத்து அவர்களை முத்தமிட்டு அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்கள். மனைவிமார்களை அழைத்து அவர்களுக்கும் உபதேசமும் அறிவுரையும் நல்கினார்கள்.முன்பை விட வேதனை அதிகமானது. கைபர் போரின் போது உட்கொண்ட உணவில் கலக்கப்பட்ட விஷத்தின் விளைவை நபி (ஸல்) உணர ஆரம்பித்தார்கள். ''ஆயிஷாவே! கைபர் தினத்தில் நான் உண்ட உணவின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த விஷத்தினால் எனது நரம்புகள் துண்டாவதை நான் உணர்கிறேன்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)தங்கள் முகத்திலிருந்த போர்வையை நபி (ஸல்) தூக்கி எறிந்தார்கள். அவர்கள் மீது திரும்ப போர்த்தினால் முகத்தில் இருப்பதை மட்டும் அகற்றி விடுவார்கள். இந்நிலையில் சிலவற்றை நபி (ஸல்) கூறினார்கள். அதுவே அவர்களது கடைசி பேச்சாகும். அதாவது: அல்லாஹ்வின் சாபம் åத, கிறிஸ்தவர்கள் மீது உண்டாகட்டும்! அவர்கள் தங்களது இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை வணங்குமிடமாக மாற்றிக் கொண்டார்கள். அரபிகளின் பூமியில் இரண்டு மார்க்கங்கள் இருக்கக் கூடாது.'' (ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅத்)தொழுகையையும் நீங்கள் உரிமையாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைகள்) பேணுங்கள் என்று பலமுறை அறிவுறுத்தினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இறுதி நேரம் நெருங்கவே ஆயிஷா (ரழி) நபி (ஸல்) அவர்களைத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:''நபி (ஸல்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி (ஸல்) அவர்களை எனது மடியில் கிடத்தியிருந்தேன். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். ''நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவா?'' என்று கேட்டபோது, ''ஆம்!'' என தலை அசைத்தார்கள். அதனை வாங்கிக் கொடுத்தேன். அது அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. ''நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?'' என்று கேட்டேன். தலை அசைத்து ''ஆம்!'' என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.''இன்னொரு அறிவிப்பில் வருவதாவது: ''நபி (ஸல்) மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல் துலக்கினார்கள். அவர்களுக்கருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக் கொண்டார்கள். ''லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன'' என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)பல் துலக்கிய பின்பு தங்களது கையை அல்லது விரலை உயர்த்தினார்கள். அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என ஆயிஷா (ரழி) செவிதாழ்த்திக் கேட்டார்கள்.நபி (ஸல்) அப்போது ''இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்...அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை... (ஸஹீஹுல் புகாரி)கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்.

ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63 வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன.

அபுபக்கர் (ரலி)......
07, ஜமாதுல் ஆகிர் ஹிஜ்ரி 13, ஆம் ஆண்டில், ஒரு குளிர் நாளில் அபுபக்கர் (ரலி) அவர்கள் குளித்து விட்டு வரும் பொழுது அடித்த குளிர் காற்றில் அவர்களது மேனியில் தாக்கப்பட்டதன் காரணமாக, உடனே அவர்களுக்கு காய்ச்சல் காண ஆரம்பித்து விட்டது. அதுவே அவர்களது மரணத்திற்கும் காரணமாக அமைந்தது.பதினைந்து நாட்களாக அவர்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தார்கள். அவர்களது நிலைமை மிகவும் மோசமாக ஆனதுடன், பள்ளிவாசலுக்குச் சென்று தொழவே மிகவும் சிரமப்பட்டார்கள். எனவே, உமர் (ரலி) அவர்களை இமாமாக நியமித்து தொழுகைகளை நடத்தும்படி உத்தரவிட்டார்கள்.
இன்னும் அபுபக்கர் (ரலி) அவர்களது நிலை மிகவும் மோசமாக ஆகிக் கொண்டிருந்த பொழுது, மருத்துவர் அழைக்கப்பட்டார். ஆனால், அபுபக்கர் (ரலி) அவர்களோ எல்லாம் முடிந்து விட்டது, இனி மருத்துவர் வந்து என்ன பயன்! என்று கூறி விட்டார்கள். மீண்டும் அவர்களிடம் இது பற்றிக் கேட்ட பொழுது, நான் என்ன சொல்கின்றேனோ அதனை நீங்கள் செய்தால் போதுமானது என்று கூறி விட்டார்கள். எனவே, மீண்டும் அபுபக்கர் (ரலி) அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாத தோழர்களும், குடும்பத்தவர்களும் அமைதியாக இருந்து விட்டார்கள்.
நோய்வாய்ப்பட்;டிருந்த அந்த கால கட்டத்தில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அளித்த வீட்டில் - அதாவது இறைத்தூதர் (ஸல்) அவர்களது பள்ளிக்கு மிக அருகிலேயே தனது இறுதிக் காலத்தைக் கழிக்க ஆரம்பித்தார்கள். உதுமான் (ரலி) அவர்களது வீடும் அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டிற்கு மிகத் தொலைவில் ஒன்றும் இல்லை, அன்னார் தனது அதிகமான நேரங்களை அபுபக்கர் (ரலி) அவர்களுடனேயே கழித்தார்கள். எப்பொழுதும் அபுபக்கர் (ரலி) அவர்களது படுக்கைக்கு மிக அருகிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.
இப்பொழுது கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள், தனக்குப் பின் ஆட்சிப் பொறுப்பிற்கு யாரை நியமிப்பது என்றும், அவ்வாறு தான் செய்யவில்லையாயின் மக்கள் தங்களுக்குள் முட்டி மோதி, ஒரு குழப்பமான நிலை உருவாகி விடுமே என்றும் கருதலானார்கள். தனது விருப்பத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மூத்த தோழர்களிடம் கலந்தாலோசனை செய்து, இறுதியாக உமர் (ரலி) அவர்களை தனக்குப் பின் அடுத்த கலீஃபாவாக நியமிப்பது என்ற முடிவுக்கு வந்தார்கள்.உமர் (ரலி) அவர்களின் முன் கோபம் குறித்து சிலர் அவரை ஆட்சியாளராக நியமிப்பது குறித்து அச்சம் தெரிவித்தனர். அத்தகையவர்களை நோக்கி அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள், உமர் (ரலி) அவர்களிடம் உள்ள நற்குணம் என்னவென்றால், ஆட்சித் தலைவருக்கே உரிய குணங்களான, வளைந்து கொடுத்துப் போகாத தன்மையும், இளகிய மனதும் அவரிடம் இருக்கின்றது என்று விளக்கமளித்தார்கள். மேலும் தொடர்ந்து, நான் அவரிடம் பழகிய நாட்களின் அடிப்படையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின்படி, நான் கோபமாக இருக்கின்ற சமயத்தில் அவர் என்னை சாந்தப்படுத்த முயற்சி செய்திருக்கின்றார், இன்னும் இளகிய மனதுடன் காணப்பட்ட இடங்களில் உறுதியுடன் இருக்குமாறும் அவர் எனக்கு அறிவுரை பகர்ந்துள்ளார்.
மேற்கண்ட அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு, தனது வீட்டின் மாடிப் பகுதிக்குச் சென்ற அபுபக்கர் (ரலி) அவர்கள், மிகவும் தளர்ந்து போயிருந்த காரணத்தால், தனது மனைவியான அமிஸ் அவர்களின் மகளான அஸ்மா அவர்களின் கரங்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டவராக அங்கே கூடி நின்ற மக்கள் மன்றத்தில் உரை நிகழ்த்த ஆரம்பித்தார்கள் :
எனக்கு அடுத்ததாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்று நடத்துவதற்காக நான் தேர்ந்தெடுத்திருக்கின்ற நபரை நீங்கள் உங்களது ஆட்சியாளராக ஒப்புக் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். நிச்சயமாக, நான் ஏன் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றேன் என்பதனை விளக்குவதற்கு எனது உடல் வலி இடம் தராத நிலையில் நான் இருக்கின்றேன். நான் எனது உறவினர் எவரையும் தேர்ந்தெடுக்கவில்லை. எனக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்துவதற்குரியவராக, உமர் (ரலி) அவர்களையே நான் தேர்வு செய்துள்ளேன். நான் சொல்வதை செவிதாழ்த்திக் கேளுங்கள், எனது விருப்பத்திற்கு நீங்கள் ஒத்துழைப்புத் தாருங்கள் என்று தனது உரையை முடித்தார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.அங்கு கூடியிருந்த அனைவரும் ஒருமித்த குரலில், ''நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம், அதற்கு கட்டுப்படுகின்றோம்'' என்று கூறினார்கள்.
அதன் பின் அங்கிருந்த உதுமான் (ரலி) அவர்களை அழைத்த அபுபக்கர் (ரலி) அவர்கள், தனது உரையை மக்களிடம் வாசித்துக் காண்பிக்குமாறு கூறினார்கள் :
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்...
அபுபக்கர் பின் அபூ குஹஃபா ஆகிய நான் இந்த உலகத்தை விட்டுப் பிரிகின்ற தருணத்தில் இன்னும் மறுமைக்குப் பயணப்படுகின்ற ஆரம்ப நேரத்தில், இன்னும் நிராகரிப்பளர்கள் சத்தியத்தை விசுவாசிப்பவர்களாக மாற விரும்புகின்ற, சத்தியத்தை அசாதாரணமாக கருதிக் கொண்டிருந்தவர்கள் சத்திய சீலர்களாக மாற நினைக்கின்ற மற்றும் பொய்யர்கள் சத்தியவான்களாக மாற விருக்கின்ற அந்த மறு உலகத்தின் முதற்படிக்குச் செல்வதற்காக உங்களிடம் பிரியாவிடை பகர்கின்ற நான் ஆற்றுகின்ற இறுதி உரையாகும் இது!
எனக்குப் பின் ஆட்சியாளராக உமர் (ரலி) அவர்களை நான் நியமித்துள்ளேன். அவருக்கு செவிதாழ்த்துங்கள், கட்டுப்படுங்கள். (நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்) அல்லாஹ்வின் அவனது தூதர் (ஸல்) அவர்களும் என் மீது பொறுப்புச் சுமத்திய கடமைகளையும், இன்னும் உங்கள் மீதும் என் மீதும், நான் என்னால் இயலுமான வரை நிறைவேற்றி உள்ளேன். அவர் நீதி செலுத்தவராரென்றால், அதனைத் தான் அவரிடம் நான் எதிர்பார்த்தது. மேலும், அது நான் அவரிடம் அறிந்து வைத்திருந்தது, இன்னும் (நல்லதொரு) மாற்றங்கள் செய்வாரென்றால், அதில் கிடைக்கக் கூடிய நல்லனவற்றை நீங்கள் அனுபவித்துக் கொள்ளுங்கள். என்னுடைய நோக்கம் சிறந்ததென்றே கருதுகின்றேன், ஆனால் மறைவானவற்றை நான் அறியக் கூடியவனல்லன். ஆனால், எவரொருவர் தனது ஆட்சியையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்துவாரென்றால், அவர் விரைவில் ஆட்சிப் பொறுப்பினை விட்டும் எவ்வாறு அகற்றப்படுவார் என்பதனையும் கண்டு கொள்வார்.உங்கள் மீது இறைவனது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக! (என்று கூறி தனது உரையை முடித்தார்கள்).
இந்த உரையை முடித்த பின் ஒரு மனிதர் அபுபக்கர் (ரலி) அவர்களைச் சந்தித்து, உமரையா உங்களையடுத்த ஆட்சியாளராக நியமித்திருக்கின்றீர்கள், உங்கள் முன்பதாகவே அவர் மக்களை எந்தவிதமாக நடத்தினார்கள் என்பதனை நீங்கள் அறியாததொன்றுமல்ல என்று கூறினார். இப்பொழுது அவரே முழு ஆட்சிப் பொறுப்புக்கும் உரித்தவராகி விட்டார், மக்களின் நிலையைச் சொல்லவே வேண்டாம் என்றும் வந்த அந்த மனிதர் கூறினார். நீங்கள் இப்பொழுது உங்களது இறைவனைச் சந்திக்கப் போகின்றீர்கள், மக்களுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட உங்களின் இந்த நிலை குறித்து அங்கே நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள் என்றும் அந்த நபர் கூறினார். படுக்கையில் படுத்துக் கிடந்த அபுபக்கர் (ரலி) அவர்கள், வந்திருந்த நபரை அமரச் சொல்லி விட்டு, எனது இறைவனைச் சந்திக்கின்ற பொழுது, அச்சத்தோடு அவனைச் சந்திக்கின்ற நிலையைக் கூறி என்னை கலவரமடையச் செய்கின்றீர்களா? எனது இறைவன் முன்னிலையில் நான் நின்று கொண்டிருக்கும் பொழுது, 'உன்னுடைய படைப்பினங்களிலேயே உன்னதமான படைப்பளார் ஒருவரை எனக்குப் பின் ஆட்சியாளராக நியமித்து விட்டு வந்திருக்கின்றேன்' என்ற பதிலைக் கூறுவேன் என்று அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறி விட்டு, உமர் (ரலி) அவர்களை அழைத்தார்கள்.
தனிமையில் அவர்களை அமர வைத்து, உமர் (ரலி) அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளைக் கூறினார்கள். பின்பு, இறைவனை நோக்கி கையை உயர்த்திய அபுபக்கர்(ரலி) அவர்கள், இறைவா! இந்த மக்களின் நல்வாழ்வுக்காகவே இவரை நான் தேர்வு செய்தேன், இன்னும் ஒருவரோடு ஒருவர் கருத்துமுரண்பாடு கொள்வதனின்றும் தடுக்கும் பொருட்டே இந்தத் தேர்வினை நான் செய்தேன். நீயே மிக அறிந்தவன்! என்று கூறினார். மிக நீண்ட ஆலோசனைக்குப் பின்னரே நான் உமரை எனக்குப் பின்னர் ஆட்சியாளராக நியமித்தேன். மிகச் சிறந்தவரும், உறுதி படைத்தவரும், இன்னும் நேர்வழியைப் பின்பற்றி நடப்பதற்கு ஆர்வம் கொண்டவருமாவார். யா அல்லாஹ்! ஆட்சியாளர்களை நேர்வழியில் நடப்பவர்களாக நீ ஆக்கியருள்வாயாக! இன்னும் எனக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பவரை ஆட்சியாளர்களிலெல்லாம் மிகச் சிறந்த ஆட்சியாளராக ஆக்கியருள்வாயாக!
மேலும், ஈராக்கை விட்டும் புறப்படுவதற்கு முன்னாள், காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தனது பொறுப்பினை முதன்னா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இதற்குப் பின்னர் பாரசீக மன்னர் மேலும் துணைப்படைகளை ஈராக்கை நோக்கி அனுப்ப ஆரம்பித்தான். கலீபாவின் உடல்நலக் குறைவின் காரணமாக முதன்னா (ரலி) அவர்கள் தலைநகர் மதீனாவிலிருந்து வரக் கூடிய செய்திகளும், தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. இதனால் மிகவும் மனமுடைந்து போன முதன்னா (ரலி) அவர்கள் தனது பொறுப்புக்களை பஷீர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து விட்டு மதீனாவை நோக்கிக் கிளம்பினார். அவ்வாறு கிளம்பிய அவர் மதீனாவை அடைந்த பொழுது, அந்த நாள் அபுபக்கர் (ரலி) அவர்களின் இறுதிநாளாக இருந்தது. ஈராக்கின் முழு நிலைமைகளையும் கேட்டறிந்து கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக உமர் (ரலி) அவர்களை அழைத்தார்கள். உமரே..! நீங்கள் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த நாள் எனது இறுதி நாளாக இருக்கக் கூடும் என்றே நான் நினைக்கின்றேன். நான் பகலில் இறந்தால் வரக் கூடிய மாலை நேரத்திலும் இன்னும் இரவில் இறந்தால் வரக்கூடிய அதிகாலை நேரத்திலும், நீங்கள் முஸ்லிம்களின் படையைத் திரட்டி முதன்னா (ரலி) அவர்களின் உதவிக்கு அனுப்பி வையுங்கள். (நான் இறந்து விடுவதால் ஏற்படுகின்ற) எந்த துக்கமும் இறைநம்பிக்கையாளர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையினின்றும், இறைவனது கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டிய கடமையினின்றும் உங்களைத் தடுத்து விட வேண்டாம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததை விடவா மிகப் பெரிய துன்பம் ஒன்று இனி ஏற்பட்டு விடப் போகின்றது? அந்த நாளில் நான் செய்த கடமைகளை நீங்கள் அறிவீர்கள். இறைவன் மீது சத்தியமாக! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்த அந்த நாளில், என்னிடம் மிகச் சிறிய அளவு பலவீனத்தைக் கூட நான் வெளிப்படுத்தியிருந்திருப்பேன் என்று சொன்னால், கருத்து முரண்பாடு காரணமாக மதீனா நகரமே தீப்பற்றி எறிந்து போயிருக்கும்.
இறைவன் தன்னுடைய அருட்கொடைகளின் மூலமாக சிரியாவில் வெற்றி அளித்து விட்டான் என்று சொன்னால், காலித் பின் வலீத் (ரலி) அவர்களை நீங்கள் மீண்டும் ஈராக்கிற்கு அனுப்பி வைத்து விடுங்கள். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவராவார், அவர் நாட்டின் முழுமையான நிலையையும் சீர்தூக்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடக் கூடியவர் என்றும் கூறினார்கள்.
இன்னும் மரணப்படுக்கையில் இருந்து கொண்டிருந்த நிலையிலேயே, அரசின் கருவூலகத்திலிருந்து நான் எவ்வளவு பணத்தை கடனாகப் பெற்றிருக்கின்றேன் என்று கேட்டார்கள். ஆறாயிரம் திர்ஹம்கள் என்று சொல்லப்பட்டது. குறிப்பிட்ட நிலத்தை விற்று அந்த விற்ற பணம் முழுவதையும் கருவூலகத்தில் ஒப்படைத்து விடும்படிக் கூறினார்கள். அதன்படியே அந்த நிலம் விற்கப்பட்டு, முழுத் தொகையும் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் தான் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட நாளிலிருந்து இதுவரை தனக்காகச் சேர்த்துக் கொண்ட சொத்துக்களின் விபரத்தைக் கேட்டார்கள். அவரது குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காகவும், முஸ்லிம்களின் போர்த்தளவாடங்களை மெருகூட்டுவதற்காக பெறப்பட்ட அடிமையும், தண்ணீர் சுமந்து வருவதற்காக வாங்கப்பட்ட ஒட்டகமும், ஒன்றரை ரூபாய் பணத்திற்குப் பெறப்பட்டதொரு துணியும் உள்ளன என்று கூறப்பட்டது. இவை அனைத்தையும் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கின்ற ஆட்சியாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். இவையனைத்தையும் இரண்டாவது கலீஃபா உமர் (ரலி) அவர்களது முன்னிலையில் கொண்டு வரப்பட்ட பொழுது, அழுதவர்களாக.. ஓ..! அபுபக்கர் அவர்களே..! உங்களுக்குப் பின்னாள் ஆட்சிப் பொறுப்புக்கு வரவிருக்கின்றவர்களை நீங்கள் நிர்க்கதிக்குள்ளாக்கி விட்டீர்களே..! என்றார்கள்.
இறப்பிற்குச் சற்று முன்னதாக தனது மகள் ஆயிஷா (ரலி) அவர்களை அழைத்த அபுபக்கர் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஜனாஸாவை எத்தனை துணிகளைக் கொண்டு சுற்றி கபனிடப்பட்டது என்று கேட்டார்கள். மூன்று துண்டுத் துணிகளை வைத்துக் கபனிடப்பட்டது என்று அவர்கள் பதில் கூறிய பொழுது, அதே போன்ற அளவுத் துணிகளைக் கொண்டு என்னைக் கபனிட்டால் போதுமானது என்று கூறினார்கள். அவற்றில் துவைத்து வைக்கப்பட்ட இரண்டு துண்டுகள் ஏற்கனவே நம்மிடம் உள்ளன, அதனை இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், இன்னுமொரு துண்டை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். இதற்கு, என்னுடைய தந்தையே..! புதிய கபன் துண்டுகளை வாங்க இயலாத அளவுக்கு நாம் ஏழைகளாக இருக்கவில்லையே..! என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தனது தந்தையிடம் கூறினார்கள். புதிய ஆடைகளா..! இறந்த மனிதன் புதிய ஆடைகளை அணிவதை விட உயிருள்ளவர்கள் அணிவதே சிறந்தது என்று பதில் கூறினார்கள். இறந்த உடலைச் சுற்றப்பயன்படும் ஆடை அந்த மனிதனின் சலத்தையும், இரத்தத்தையுமே போர்த்திக் கொண்டிருக்கும் என்றும் கூறினார்கள்.
அபுபக்கர் (ரலி) அவர்கள் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்தநாளில் மரணமடைந்தார்கள் என்றும் கேட்டார்கள். இதற்கு, 'திங்கட்கிழமை' என்று பதில் கூறப்பட்டதும், நானும் இதே நாளில் மரணமடைய வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றேன் என்றார்கள்.
மேலும், தன்னை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
இறுதியாக, இறைவா..! என்னை முஸ்லிமாகவே மரணிக்கச் செய்வாயாக..! இன்னும் நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வாயாக..! என்றும் பிரார்த்தித்தார்கள். இதுவே, அவர்களது வதனத்திலிருந்து வெளிவந்த இறுதி வார்த்தைகளாகவும் அமைந்தன. அவர்கள் நினைத்தது போலவே, 22, ஜமாதுல் ஆகிர் மாதம் திங்கட்கிழமை அன்று மக்ரிப் மற்றும் இஷா நேரத்திற்கிடையே மரணமடைந்தார்கள். இன்னா லில்லாhஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இறைவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது.
ஜனாஸா நல்லடக்கத் தொழுகையை உமர் (ரலி) அவர்கள் முன்னின்று நடத்தினார்கள். அன்றைய இரவே ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அடக்கப்பட்டிருக்கின்ற இடத்திற்கு மிக அருகில், தன்னுடைய தலைவருக்கு மிக அருகிலேயே அவரின் உற்ற நண்பரும் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
அபுபக்கர் (ரலி) அவர்கள் மரணமடைந்த பொழுது அவருக்கு 63 வயதாகியிருந்தது.
ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் மற்றும் மூன்று மாதங்கள், பதினொரு நாட்கள் கழித்து மரணத்தைச் சந்தித்தார்கள்.
Download As PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக