இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்". என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்.(ஆதாரம்: புகாரி 2457)

வருக ! வருக !! مرحبًا بكم أهلاً وّسهلاً


மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப் பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர் 1. ஆரோக்கியம். 2. ஓய்வு. (ஸஹீஹுல் புகாரி 6412)

சனி, ஏப்ரல் 18, 2009

இன்னொரு வாய்ப்பு!



இன்னொரு வாய்ப்பு! அச்செடு மின்னஞ்சல்

அதுக்குள்ளே விடிஞ்சிடுச்சா?

 

போர்வைக்குள்ளே சூரியன் புகுந்ததுபோல் இருந்தது. முகத்திலிருந்து போர்வையை விலக்கினேன். என்னைக்கும் போலத்தான் எனக்கு அன்னைக்கும் விடிஞ்சது. எந்த வித்தியாசமும் இல்லை.

இன்னொரு வாய்ப்பு!

அதே விழிப்பு, அதே பல்விளக்கல், அதே குளியல், அதே ஓட்டம்.. ஓட்டம்....ஓட்டம்!

பாத்ரூம் சென்று பிரஷ்ஷை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். துணியை உடுத்திக்கிட்டு மறுபடி அதே ஆஃபிஸுக்கு ஓடணும்... பரபரவென! என்னடா இது வாழ்க்கை.. ச்சே!

முனகிக் கொண்டே முன்கதவு வாசற்படி அருகே வந்து கீழே வந்து கிடந்த நியூஸ்பேப்பரைக் குனிந்து எடுத்தேன். முதல் பக்கத்தில் ஓரத்தில்... என்ன அது? ஓஹ்... என் படம் மாதிரி இருக்கே? என்.. என் படம் எப்படி?

புதிரா இருக்கே? அதுவும் மரண அறிவிப்பு பகுதியில..ம்... கழுத்தோரம் வியர்வை லேசாக கசகசத்த மாதிரி இருந்தது. பிரமையா இருக்கும். அந்தப் படத்திலிருப்பது நானக இருக்க முடியாது. பேப்பரைத் தூக்கி டேபிள் மீது போட்டு விட்டு நகர்ந்தேன்.

நேற்றிரவு நெஞ்சில் லேசான வலி ஏற்பட்டது நிஜம்தான்.. நல்லா நினைவிருக்கிறது. கொஞ்ச நேரத்தில அது அதிகமானப்போ பொறுக்காம கத்தினதுவரை நினைவில் உள்ளது. அதன்பின் நன்றாக படுத்துத் தூங்கி விட்டேன் என்றல்லாவா நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்படியெனில்... அப்படியெனில்....

நிமிர்ந்து மணி பார்த்தபோது முதுகுத் தண்டு சில்லிட்டது. அச்சச்சோ.. மணி பத்தரை! இன்று திங்கட்கிழமை வேறு... இன்னும் ஆபிஸுக்குக் கிளம்பவே இல்லை. அந்த மேனேஜர்
கத்துவாரே?

நான் அடித்துப் போட்டமாதிரி தூங்கி இப்போதுதான் எழுந்திருக்கிறேன் என்பது இப்போதுதான் புலப்பட்டது. "சரி... வீட்டு
ல உள்ளவங்க  எழுப்பி விட்டிருக்கலாமில்ல" என்று முனகிய போதுதான் மனைவியின் நினைப்பே வந்தது.. என் மனைவி எங்கே? பிள்ளைகள் எங்கே? "எல்லாரும் எங்கேப் போய் தொலைஞ்சீங்க?" கத்தினேன் கடும் கோபத்துடன்...

முன்புறக் கதவிற்கு அடுத்த அறையில் பெரிய ஹால்... கும்பலா கொஞ்சம்பேர் பேசிக் கொண்டிருப்பது போலச் சத்தம் கேட்கவே ஹாலை நோக்கி நடந்தேன்.

அட..இவ்வளவு பேர் இருக்காங்க... ஆனாலும் அமைதியா இருக்கு... அது சரி! ஏன் சிலர் இங்கே அழுதிட்டிருக்காங்க?

அவர்கள் யார்?, ஏன் கூக்குரல்? என்ற ஆவல் மேலிட அருகில் நெருங்கினேன். ஒரு சட்டி நிறைய நெருப்பை மடியில் அள்ளிப் போட்டுக் கொண்டது போல் தூக்கி வாரிப் போட்டது. 

நடு ஹாலில் யாரோ படுத்தி
ருந்தார்கள். பார்க்க என்னைப் போன்றே இருந்தது. ஹலோ.. என்ன வெளையாடுறீங்களா? "நான் இங்கே நிக்கிறேன்... என்னைப் போன்றே அங்கே படுத்திருப்பது யாரு?" என்று கத்தினேன். படுத்திருந்தவர், நின்றிருந்தவர்கள் அமர்ந்திருந்தவர்கள் - யார் காதிலும் என் கத்தல் விழுந்ததுபோலத் தெரியலை. கொஞ்சம் பயம் ஏற்பட்டது!.

"இங்கே பாருங்க.... நான் நானாக இங்கே நிற்கிறேன்!" இம்முறை பெருங்குரலெடுத்துக் கதறினேன். ம்ஹூம்! யாரும் திரும்பக்கூட இல்லை என்பக்கம்... எல்லோருடைய பார்வையும் படுக்க வைத்திருந்த உருவம் மீதே நிலைத்திருந்தது.

செய்வதறியாது வேகமாக பெட்ரூமுக்கு மீண்டும் திரும்பினேன்.. கண்ணாடி முன் நின்று இருமுறை திரும்பி நின்று பார்த்துக் கொண்டேன்.

அப்படி என்றால் நான் இறந்து விட்டேனா?

என் மனைவி எங்கே?, என் பிள்ளைகள் எங்கே?, என் அப்பா - அம்மா? என் ஃப்ரண்ட்ஸ்? தேடிக் கொண்டே மீண்டும் ஹாலுக்கு வந்தேன். என் கேள்விக்கு பதில் கிடைத்தது. எல்லாருமே கிட்டத்தட்ட அழுது கொண்டு நிற்கிறார்கள். சிலர் மற்றவர்களை சமாதானம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

என் மனைவி? ஆமாம் ... அதோ அழுது கொண்டிருக்கிறாள். பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தாள். என் சின்ன மகள்? அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தாயின் காலைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டிருக்கிறாள்.

என் மகள் உயரத்திற்கு அமர்ந்து, அவள் முகத்திற்கு எதிரா என் முகம் வைத்து எப்படி சொல்வது.. "நான் உன்னை மிக மிக நேசிக்கிறேன்" என்று?

என் மனைவியிடம் எப்படி சொல்வது "நீ மிக அன்பானவள்!" என்று?

என் தாய் தந்தையிடம் எப்படிச் சொல்வது "நீங்களின்றி நான் ஒன்றுமே இல்லை" என்று?

என் நண்பர்களும் நிற்கிறார்கள்.. அவர்களிடத்திலும் எப்படிச் சொல்வது "நீங்கள் எத்தனையோ முறைகள் தவறு செய்வதிலிருந்து என்னைச் சீர் படுத்தியுள்ளீர்கள். எனக்குப் பல்வேறு சமயங்களில் உதவியும் செய்திருக்கிறீர்கள். நான் உங்களுக்கு என்றும் நன்றி செலுத்தும் நண்பன்" என்று.

கூட்டத்தில் ஒருவன் கண்களில் வழியும் கண்ணீரை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு நிற்கிறான்.. அவன்... அவன்...  அவன் ஒரு சமயத்தில் என்னுடைய மிக நெருங்கிய தோழனாய் இருந்தவனாயிற்றே? இவனுமா இங்கே வந்திருக்கிறான்? இவனுக்கும் எனக்கும் சில மனக் கசப்புகள் ஏற்பட்டதனால் ஒரேயடியாக பிரிந்து விட்டோம்.. அவனாக வந்து பேசட்டும்னு நான் இருந்தேன்... அவனோ நான் முதலில் பேச வரட்டும் என்று இருந்தான். ஈகோ இதுதானா?

துணுக்குற்ற மனதுடன் அவன் அருகில் ஓடினேன். அவன் கையைப் பிடித்து, "சரி.. பழச எல்லாத்தையும் மறந்துட்டு வந்திருக்கே! நானும் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். எப்பவும்போல இன்னிக்கி வரை நாம உற்ற நண்பர்கள் தாம்ப்பா" என்றேன். அவனிடம் எந்தச் சலனமும் இல்லை. எனக்கு மண்டையில் சுர்ரென்று ஏறியது. கையப் பிடிச்சி நானும் மன்னிப்பு கேக்கிறேன். அப்பவும் அவனோட திமிரப் பாரேன் என்றது என்னுள் ஒரு குரல்!

ஆனால்.. ஆனால் அவன் என்னைப் பார்த்தது போலவே தெரியலையே? அவன் கையைக்கூட நான் பிடித்... எங்கே பிடிக்க வில்லையா? இப்போது என்னுள் ஏதோ இருண்டது.

இறைவா! அப்படின்னா.. அப்படின்னா... நா நெசமாவே செத்துட்டனா? அதுவரை நிற்கத் திராணியுடன் இருந்த நானும் உடைந்து போய் அழ ஆரம்பித்தேன். நீள வாக்கில் படுத்துக் கிடந்த என் அருகே நானும் மற்றவர்கள் போன்று அமர்ந்து அரற்ற ஆரம்பித்தேன்.

என் இறைவா! தயவு செய்து இவர்களிடத்தில் நான் நினைத்ததுபோல ஒரு சில வார்த்தைகள் பேசவாவது ஒரு வாய்ப்புக் கொடு! இன்னும் சில நாட்களுக்கு மட்டுமாவது நான் உயிர் பிழைத்திருக்கச் செய்!

நேற்று படுக்கைக்குச் செல்லும்வரை என் மனைவி, என் பெற்றோர், என் பிள்ளைகள் அதோடு என் நண்பர்கள் எல்லாரிடமும் நான் உண்மையில் அவர்களை எந்த அளவு நேசிக்கிறேன் என்று சொல்ல வில்லையே... அதுபோன்று அவர்களிடம் நடக்கவும் இல்லையே? சரி...  இந்த இரண்டாம் வாய்ப்பில் கட்டாயம் சொல்லி விட வேண்டும்.

செய்வதறியாது மீண்டும் எழுந்து வீட்டிற்குள் சுற்றிச் சுற்றி நடக்க ஆரம்பித்தேன். அடுத்த அறைக்கு வந்தேன்.

என் மனைவி என் பின்னால் வந்ததுபோல் இருந்தது. சந்தோஷமாய் கத்தினேன். "என்மீது நீ எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாய்! நானும் உன் மீது உயிரையே வைத்திருக்கிறேன்." அவள் சலனமின்றி நகர்வதைக் கண்டு குரலை இன்னும் உயர்த்தினேன்.

இயன்றவரை உரக்கக் கத்தியும் அவள் காதில் அது விழவில்லை. கொஞ்சம் சிந்தித்ததில் நான் அவளிடம் இதுநாள் வரையில் இதுபோன்று சொன்னதே இல்லையே என்பது புலப்பட்டது.

ஓ...என் இறைவா! என்ன கொடுமை இது! என நெஞ்சு தாளாமல் விம்மி அழ ஆரம்பித்தேன்.
    
ஒரு.... ஒரே.. ஒரு வாய்ப்பு கொடுத்து விடு....நான் என் பிள்ளைகளைக் கட்டியணைத்து முத்தமிட வேண்டும். ஒரே ஒரு முறையாவது என் அம்மாவின் முகத்தில் புன்னகை வரவழைக்கும்படி இனிமையாகப் பேச வேண்டும். என்னைப் பெற்றதற்கு பெருமிதம் கொள்ளும்படி என் தந்தை மனம் குளிர நான் ஏதாவது செய்து விட வேண்டும். என் நட்பு மலர என் நன்றிகளையும், நான் மனம் புண்படுத்திய சிலரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு....

நான் கதறிய கூக்குரல் என் காதில் மறுபடி கேட்டது.

இறைவா!... ஒரு முறை... ஒரு வாய்ப்புக் கொடு..உனக்கு நிறைய நன்றியுடையவனாக இருப்பேன்...

நா தழுதழுத்தது.. கதறிக் கொண்டே இருந்தேன்..

"என்ன ... போர்வைக்குள் இறைவனிடம் பிரார்த்தனையா?" என் மனைவியின் குரல் கேட்டது போல் இருந்தது.

முகத்தில் இருந்த போர்வையை விலக்கினேன்..

"நீங்கள் தூக்கத்தில் புலம்புவதைக் கேட்டு நான் தான் உங்களை எழுப்பினேன்!. என்ன கனவா?" என்றாள் ஆறுதலாக...

ஓஹ்!!! நான் தூங்கியிருக்கிறேன்.. இடையில் கனவு.. ச்சே!

முகத்தில் நிரம்பி வழிந்த வியர்வைத் துளிகளைத் துடைத்தவாறு கட்டிலில் இருந்து இறங்கினேன்.

நாக்கு வறண்டிருந்ததால் எதுவும் பேச முடியவில்லை. தாகமாக இருந்தது. என் மனைவி புரிந்து கொண்டு ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் கொண்டு வந்து அமர்ந்து நீட்டினாள்.

தாகம் தீர்ந்தபின் நான் மெல்லப் பேசினேன். பேசப் பேச என் மனைவி கேட்கிறாள். பதில் அளிக்கிறாள். அந்நிமிடம் புதிதாய் பிறந்ததுபோல் ஏதோ ஓர் உணர்வு. சந்தோஷமாக இருந்தது!

தண்ணீர் டம்ளரைக் கையில் வைத்து விட்டு கண்களில் நீர் கசிய அவள் கையை இறுகப் பற்றினேன். நெஞ்சில் பாறாங்கல்லாய் அழுத்திக் கொண்டிருந்த வாக்கியங்களைச் சொல்ல வாய் திறந்தேன். "நீ... நீயே என் அன்பான மனைவி... உன்னை மிக மிக நேசிக்கிறேன்" என்றேன்.

மிக மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்பாய் நாலு வார்த்தை பேசியது கேட்டு அவள் முகத்தில் தெரிந்த வியப்பையோ, தொடர்ந்து அவள் கண்களில் துளிர்த்த நீரையோ நான் ஆராய விரும்ப வில்லை.

மனம் முழுக்க சிறகுகள் கட்டிக் கொண்டு பறவைகள் பறப்பது போல் உணர்ந்தேன்.

அன்பாய் ஒருவரிடம் பேசுவது இவ்வளவு இதம் தரும் செயலா? இது தெரியாமல் எதை அள்ளிக் கொண்டு போக இத்தனை நாள் நான் இப்படி இருட்டில் இருந்தேன்?.

என் இறைவா! இது உண்மையில் நீ எனக்குக் கொடுத்த வாய்ப்பு!

இதை நான் வீணாக்க மாட்டேன்! என் ஈகோ, என் மனதில் வளர்ந்த விஷச்செடிகள், விஷப் பாம்புகளாக வளர்த்துக் கொண்ட குணங்கள் அத்தனையும் சட சட வெனச் சரிந்து விழுந்து எரியும் சப்தம் என்னுள் கேட்கிறது.

ஜன்னலோரம் மெல்ல எழுந்து நின்றேன். வெளியே இருள் நீங்கி புத்தம் புது ஒரு விடியலுக்கான ஆயத்தங்கள் வானில் தயாராகி கொண்டிருந்தன.

***

மானிட்டர் திரையில் படித்த முகம் தெரியாத ஒருவனது கனவின் பாதிப்பு என்னையும் தாக்கியது. அடுக்களையில் மும்முரமாயிருந்த மனைவியின் பக்கம் சென்றேன்.

"மூட் அவுட்டாயிட்ட மாதிரி இருக்கு?" முகம் பார்த்த மனைவி கேட்டாள்.

"எனக்குக் கொஞ்சம் டீ குடிக்கனும் போலருக்கு. வேலையை முடிச்சிட்டு டீ எடுத்துட்டு வாயேன். காரணம் சொல்றேன்". திரும்பிச் சென்று மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.

"இப்ப சொல்லுங்களேன் ..." சற்று நேரத்தில் சூடான, சுவையான தேனீரோடு வந்த மனைவி கேட்டாள்.

"இதப் படிச்சுப் பாரு" இருக்கையிலிருந்து எழுந்து கொண்டு இடமளித்தேன். அடிக்கடி இதுபோல் எனது இரசனைகளை மனைவியைப் படிக்கச் சொல்லிப் பகிர்ந்து கொள்வது வழக்கமாகையால் மலர்ச்சியோடு படிக்கத் தொடங்கிய மனைவியின் முகம் சட்-சட்டெனை மாறிக் கொண்டே வருவதைக் கவனித்தேன்.

"இந்தக் கனவு நல்லதா கெட்டதான்னு தெரியல. ஏன்னா "நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (பொய்க்) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் எவரேனும் தாம் விரும்பாத தீய கனவு கண்டால் உடனே அவர் தம் இடப் பக்கத்தில் துப்பட்டும்.. ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பும் கோரட்டும். அப்போது அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட இயலாது" அப்டின்னு (புகாரீ 7005) ஹதீஸ் இருக்குதுல்ல ...?" என்று கேட்டாள் மனைவி.

"கனவு நல்லதா, கெட்டதான்னு நமக்கு எப்டித் தெரியும். ஆனா, கனவு கண்டவருக்கு நல்ல மனமாற்றத்த ஏற்படுத்தி இருக்குன்னு வெளங்குதில்லையா?" என்று எதிர்க் கேள்வி போட்டேன்.

"சும்மானா நெட்டுலயும் ஈமெயில்லயும் நல்லதுன்னு நெனச்சு எழுதறவங்க நிறைய இருக்கிறாங்கன்னு தெரியும். அவரு அப்டி ஒரு கனவக் கண்டு, திருந்தி வாழ்ந்தா சந்தோஷம்தான். ஆனா கனவே காணாமல் எழுதியிருந்தா பிரச்சினை. ''ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக வலிந்து சொல்வரானால் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால் அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது!'' என்றும் (புகாரி 7042) ஹதீஸ் இருக்கு!

"எல்லாத்துக்கும் ஹதீஸச் சொல்லி மடக்குறியே"

"என்ன செய்ய ...? குர்ஆனுக்கு அடுத்தபடியா அதுதானே நம்ம வாழ்க்கைக்கு அடிப்படை" என்று ஒரேடியாப் போட்டாள் மனைவி.

வாயடைத்துப் போனேன்.



--
with more kinds,
M. Zakir Hussain
My Blog: http://read-quran.blogspot.com




Download As PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக